சென்னை ஆவடி காமராஜர் நகர் 3ஆவது தெருவைச் சார்ந்தவர் தமிழ்மணி (30). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி வைஷாலி (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
மேலும், வைஷாலி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் கர்ப்பமான மூன்றாவது மாதத்திலிருந்து திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜனவரி 28) வைஷாலி, தனது தாய் சரளாவுடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வைஷாலியை ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வைஷாலிக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வைஷாலி உயிரிழந்தார்.
உயிரிழந்த கர்பிணி வைஷலாலி இது குறித்து தகவலறிந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து வைஷாலியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். வைஷாலிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. பிரீத்தி பார்கவி மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
வைஷாலி இறப்புக்கு காரணமான மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைஷாலியின் உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.