ரத்தம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை: வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'ரத்தம்' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அதேபோல், தனது மூத்த மகள் மீராவின் மறைவுக்குப் பிறகு விஜய் ஆண்டனி பொதுவெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்வில் தனது இளைய மகள் லாராவை அழைத்து வந்தார் விஜய் ஆண்டனி.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியபோது, ‘ரத்தம் மிக அருமையான திரைப்படம். தொழில் சார்ந்த அனைவரையும் காப்பற்ற முன் வந்து நிற்கிறார் விஜய் ஆண்டனி. ரத்தம் படத்தின் நாயகனாக மட்டும் இல்லை ரியல் நாயகனாக விஜய் ஆண்டனியை பார்க்கிறேன். விஜய் ஆண்டனிக்கு கடவுள் மனது. எல்லா மதத்தின் கடவுள்களும் விஜய் ஆண்டனி பக்கம் நிற்பார்கள். ரத்தம் படத்தின் 44ஆவது நிமிடத்தில் இருந்து வரும் ஒவ்வொரு காட்சியும் இதுவரை எந்த படத்திலும் ரசிகர்கள் பார்க்காத காட்சியாக உள்ளது. பத்திரிகையாளர்களை தூக்கிப் பிடிக்கும் படமாக ரத்தம் வந்துள்ளது’ என்று பேசினார்.
நாயகி மஹிமா நம்பியார் பேசியபோது, ‘ரத்தம் படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநருக்கு ஐடியாவே இல்லை. இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் சிங்கிள் மதர். எனவே மஹிமா பொருத்தமாக இருக்கமாட்டார் என நினைத்திருந்தார். அதன் பிறகு, தயாரிப்பாளர் சிபாரிசு செய்யவே ஆடிசன் வைத்து தேர்வு செய்தார்.
இயக்குநர் அமுதன் என்னிடம் கதை சொன்னார். கதை கேட்டு வீட்டிற்கு செல்லும்போது நான் கதை கேட்டது தமிழ் படம் இயக்குநர் அமுதனிடம்தானா என்று கூகுளில் தேடி பார்த்தேன். அந்த அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட கதையாக எழுதி இருந்தார். ரத்தம் படம் பார்த்த பிறகு அனைவரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்’ என்றார்.
இயக்குநர் சி.எஸ் அமுதன் பேசியபோது, ‘இந்த படத்தை எடுக்க கொஞ்சம் தைரியம் இருக்க வேண்டும். காரணம் இந்த படத்தில் நிறைய பேசப்படாத விஷயங்களை பேச வைத்துள்ளோம். என்னதான் வெற்றிபெற்ற படங்களை கொடுத்தாலும், இது போன்று சுவாரஸ்யமான படங்களை பண்ண வேண்டும் என்பது தான் எனது ஆசை என்றார்.
மேலும், என் அப்பா இறந்த போது திரைத்துறையில் இருந்து வந்த ஒரே நபர் விஜய் ஆண்டனி மட்டுமே. அவர் சொன்னதை அவருக்காக நான் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம் அமுதன் என்று சொன்னார். அதேபோல் நாங்கள் இருக்கிறோம் விஜய் ஆண்டனி’ என்று பேசினார்.
விஜய் ஆண்டனி பேசியபோது, ‘எனக்கு இசை பற்றி தெரியாதபோது, இசை மிக சுலபம் என கற்றுக்கொடுத்தவர் தான் அமுதனின் தந்தை. இயக்குநர் அமுதனுடன் எனக்கு நீண்ட நாள் பழக்கம். ஒன்றாக இணைந்து பணியாற்றலாம் என நினைத்தோம். அது ரத்தம் படம் மூலமாக நிறைவேறி உள்ளது. படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். அதேபோல தொழிநுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர் வாழ்த்துகள். நாம் மீண்டும் இணைந்து பணியாற்றலாம் அமுதன்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க:வருமான வரித்துறையினர் மீதான தாக்குதல்; 15 திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!