தங்க நகை சீட்டு மோசடி விவகாரம் சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லஸ் என்கின்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இதன் இயக்குனர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பராமரிப்பு காரணமாக அனைத்து பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடைகளும் மூடப்பட்டதால், இதில் நகை சேமிப்பு திட்டம் மூலம் பல்வேறு முதலீடு திட்டங்களில் பணம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள், காவல் நிலையங்களில் கடை மூடப்பட்டதாகவும், தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.
இதில் திருச்சி மற்றும் மதுரையில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பிரணவ் ஜுவல்லர்ஸ்-ன் உரிமையாளர் மதன் இதற்கு விளக்கம் அளிக்கக்கூடிய வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், தான் 100 கோடி ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியதாக வரும் செய்தி வதந்தி எனவும், பிரணவ் நகைக் கடைகள் அனைத்திலும் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.31 கோடி மட்டும் தான் எனவும், தன் மீது வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது நிறுவனத்திடம் ஏராளமான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் முறையாக முதலீடு செய்த தொகையைத் தர தயாராக இருப்பதாகவும், உரிமையாளர் மதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை எனக் கூறிய அவர், குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்கும் அவர்களது பணம் செலுத்தப்படும் எனவும், இது குறித்து காவல் துறையிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகள் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். விரைவில் ஒவ்வொரு நகைக் கடைகளாக திறக்கப்படும். முதிர்வு தொகை திருப்பி கொடுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டை மற்றும் திருச்சியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள், தொடர்ந்து புகார் கொடுத்து வருவதன் அடிப்படையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி தலைமையில், அதிகாரிகள் குரோம்பேட்டை பிரணவ் ஜூவல்லஸ் நகைக்கடைக்கு நேரடியாக சென்று, அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் சேவை நாளை முதல் நிறுத்தம்.. காரணம் என்ன?