ஹைதராபாத்:சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், அதில் இருந்து பிரிந்த ரோவர் தனது ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளது. லேண்டரில் இருந்து ரோவர் (பிரக்யான்) பிரிந்து சென்ற காட்சிகளை இஸ்ரோ நேற்று முந்தினம் (ஆக. 24) வெளியிட்டிருந்த நிலையில் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில், "நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் இறங்கிய 'சிவ சக்தி' புள்ளியில் ரோவர் தனது ஆய்வு பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ காட்சியை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:PM Narendra Modi: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாள் 'தேசிய விண்வெளி தினம்' : பிரதமர் மோடி அறிவிப்பு!
அந்த வீடியோவில், 'சிவ சக்தி' புள்ளியில் இறங்கிய ரோவர், அங்கிருந்து சிறிது தூரம் நகர்ந்து சென்று பின்னர் இடதுபுறமாக திரும்பி நின்று சந்திரனை ஆய்வு செய்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சந்திரயான் -3 திட்டத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளையும் வணக்கத்தையும் பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார். நிலவின் தென்துருவத்தில் இந்தியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது என்றும் கூறினார். விண்வெளிப் பயணங்களில் தரையிறங்கும் புள்ளிக்கு அறிவியல் ரீதியான பாரம்பரியம் உள்ளது என்றும் அதன்படி சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்கிய புள்ளிக்கு 'சிவசக்தி' என்று பெயர் வைக்கப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார்.
அதேபோல், சந்திரயான் 2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம், 'திரங்கா' என்று அழைக்கப்படும் என்றும் அந்த திரங்கா புள்ளி, இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உந்துதலாக இருக்கும், தோல்வி என்பது முடிவு அல்ல என்பதை அப்புள்ளி உணர்த்தும் என்றும் கூறினார். மேலும், சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பெண் விஞ்ஞானிகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க:Chandrayaan 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி' : பிரதமர் மோடி அறிவிப்பு!