தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறான் என் மகன்" - பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!

Praggnanandhaa Father Ramesh Greeting Message: ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்ற குறளில் உள்ளது போல், என் மகன் எனக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்து இருக்கிறான் என பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Praggnanandhaa Father Ramesh Greeting Message
இந்திய திருநாட்டிற்கே பெருமை சேர்த்து இருக்கிறான் என் மகன் - பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:53 PM IST

சென்னை: பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக செஸ் நிறுவனமாகும். இதன் சார்பில், இந்தாண்டு 10-ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த வாரம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நார்வே வீரர் கார்ல்சனுடன் முதல் 2 சுற்றுகளை டிரா செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா டைப்ரேகர் சுற்றில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் அடுத்த வருடம் நடைபெறும் செஸ் வீரர்களிடையே மிக முக்கியமாகப் பார்க்கக் கூடிய செஸ் கேண்டிடேட் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றார்.

மேலும், பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்தாலும், இந்திய மக்களின் மனதில் ஓர் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். கடந்த 21-ஆண்டு செஸ் வரலாற்றில், விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பிறகு, உலக செஸ் போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பிரக்ஞானந்தாவையே சேரும்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களும் திரளாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா, தனது அடுத்த பதக்கத்தை வெல்வதற்கு இன்று (ஆகஸ்ட் 30) இரவு ஆசியப் போட்டிக்காகக் கொல்கத்தா செல்கிறார்.

இது குறித்து பிரக்ஞானந்தா தந்தை ரமேஷ் கூறியதாவது, "என் மகன் பிரக்ஞானந்தா நாட்டிற்காக விளையாடுவது, மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும், அவரின் புகழ் உலகம் எங்கும் செல்வதால், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்ற குறளில் உள்ளது போல், என் மகன் எனக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை இந்தியத் திருநாட்டிற்கே பெருமை சேர்த்து இருக்கிறான். இப்படியொரு மகனைப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்திய நாடே அவரை கொண்டாடுகிறது" என்று ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரக்ஞானந்தா ஓய்வு இல்லாமல் விளையாடுவது குறித்து கேட்டபோது, "இந்த ஆசிய விளையாட்டு முதலிலே திட்டமிடப்பட்டது. அதனால் அவர் இன்று (ஆகஸ்ட் 30) இரவு கொல்கத்தாவிற்குச் செல்கிறார். மேலும், ஆசிய விளையாட்டு முடித்த பிறகு சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது செஸ் பயணத்தைத் தொடருவார்" என்றார்.

கல்வியையும், விளையாட்டையும் எப்படிக் கையாளுகிறார்? என்ற கேள்விக்கு, "அவர் தற்போது பயின்று வரும், கல்வி நிறுவனம் அவருக்கு முழு உறுதுணையாக இருந்து வருகிறது. விளையாட்டையும் கல்வியும் ஒரே மாதிரி அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். செஸ் போட்டிகளுக்குச் சென்ற பிறகு செஸ் பயிற்சி மட்டுமல்ல அவருடைய கல்வி என இரண்டிலும் சமமாகக் கவனம் செலுத்தி வருகிறார்" என்றார் பிரக்ஞானந்தாவின் தந்தை.

இதையும் படிங்க:ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details