சென்னை: நிலவின் தென் துருவத்தை அடைந்து வரலாற்று சாதனையை படைத்து உள்ள இந்தியா, மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஒரு சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது. விக்ரம் லேண்டரின் ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறங்கி ஆய்வைத் தொடங்கி உள்ள இந்த நேரத்தில், அஜர்பைஜானில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட கடும் முயற்சியில் இறங்கி உள்ளார், தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரும், ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவருமான மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதிய முதல் இரண்டு சுற்றும் டிராவில் முடிந்தன. ஃபிடே உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாளில் வெள்ளை நிறக் காய்கள் உடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா, 35வது நகர்வில் ஆட்டத்தை டிரா செய்தார்.
இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட். 23) நடைபெற்ற இரண்டாவது சுற்றில் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்கள் உடன் விளையாடி ஆட்டத்தை டிரா செய்தார். இதனால், இன்று (ஆகஸ்ட். 24) டைபிரேக்கர் முறையில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதனை இந்தியாவே உற்றுநோக்கும் நேரத்தில், பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷின் நேரத்தை ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள் நாடின.
இதன் பலனாக இன்றைய ஆட்டம் குறித்து பேசிய இந்திய கிராண்ட் மாஸ்டரின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ், "நேற்றைய ஆட்டம் என்பது சிறப்பான ஆட்டம். இருவரும் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தனர். என்னுடைய பார்வையில், எளிதாக நேற்றைய ஆட்டத்தை மேக்ன்ஸ் கார்ல்சன் ட்ராவில் கொண்டு வந்து விட்டார்.