கரோனா ஊரடங்கு காலத்தில், மின் கட்டண அளவீடு செய்யப்படாததால், முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதை இரண்டு இரு மாதங்களுக்கு என பிரித்து வசூலிக்கப்படும் என, தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. மின்வாரியத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பான மனுவில், முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்குப் பதில், மின் பயன்பாட்டு யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் மின் கணக்கீட்டு நடைமுறையில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.