சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(42). இவர் பெரும்பாக்கத்தில் சிக்கன் பக்கோடா கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன். இவர் இன்று காலை 10 மணியளவில் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் விட்டு, விட்டு நேதாஜி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் இதில் இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து அவர் உயிரிழந்தார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அருகில் உடலை சாலையிலேயே வைத்துக் கொண்டு பெரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க மறுத்து மின் வாரிய அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பிகள் குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் தான் விபத்து நேரிட்டதாகவும், மின்வாரிய அதிகாரிகளை கைது செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.