கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக் காட்டி, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வசந்திதேவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, ஊரடங்கு நீக்கப்படுமா என்பது குறித்து மே 31ஆம் தேதி தான் முடிவெடுக்கப்பட உள்ள நிலையில், போக்குவரத்து வசதிகள் முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படமாட்டாது எனவும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து இதுவரை அரசுத் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை எனவும் வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், தேர்வு நடத்துவதற்கான நடைமுறையை வகுத்துள்ளதாகவும், தகுந்த இடைவெளியை பின்பற்ற ஏதுவாக, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளதாகவும், தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் இதுகுறித்த விரிவான அறிக்கை ஜூன் 11ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வு நடத்துவதற்கு மேற்கொள்ள உள்ள நடைமுறைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், வசந்தி தேவியின் மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்யவும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கரோனாவை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது, கரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை ஜூன் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இதையும் படிங்க:தொடங்கியது 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி