சென்னை:சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு பறக்கும் விரைவுச்சாலை (19 கி.மீ) திட்டம் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைவாக கோர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் மகிழ்ச்சி
இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்படும்போது ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றம்
கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்டது. எனினும் ஒன்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஆண்டு சென்னை வந்தபோது இந்த திட்டத்தை பற்றி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பின்னர் தேசிய - மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முதலில் வகுத்த திட்டத்தை மாற்றி ரூ.5,000 கோடி மதிப்பில் பறக்கும் இரண்டடுக்கு சாலை திட்டமாக மாற்றப்பட்டது.
மேம்பால பணிக்கு விரைவில் ஒப்பந்தம் திட்டத்தை தொடங்க அழுத்தம்
அதன் பிறகும்கூட எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனினும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் தமிழ்நாடு அரசை இந்த திட்டத்தை தொடங்க அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டடுக்கு சாலையில் கன்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள் மேலே உள்ள சாலையிலும், மற்ற நகரத்திற்குள் செல்லும் வாகனங்கள் கீழே உள்ள சாலையிலும் செல்ல அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிட்டிசன் செந்தில், ஆர்.டி.ஐ ஆர்வலர் கூறுகையில், "குறிப்பாக சாலை திட்டம் தொடங்கப்படும் போது அதற்கு சரியான திட்டம் வகுக்க வேண்டும். இந்த துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் விரைவுச்சாலை சாலை திட்டத்தை பொறுத்தவரை பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், ரூ.1,800 கோடியிலிருந்து இன்று ரூ.5,000 கோடி வரை திட்ட மதிப்பு உயர்ந்திருக்கிறது. அரசு மக்களின் வரிப்பணத்தை வீண் செய்ய்யக்கூடாது என்பதை உணர வேண்டும். உடனடியாக இந்த திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நகரத்திற்குள் வாகன நெரிசல் படிப்படியாக அதிகரித்துள்ளது. இது போக வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியை கடந்து பிறகுதான் துறைமுகத்திற்கு செல்கிறது. அரசு எப்படி வெளிவட்ட சுற்றுப்பாதைகளின் பணிகளை முடித்திருக்கிறதோ அதே மாதிரி உள் வட்ட சாலையையும் முடிக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "வாகனங்கள் எந்த வழியில் செல்லலாம் என ஏற்கனவே ஒரு ஆய்வு நடத்தியுள்ளோம். இருப்பினும் அடுத்த கட்ட ஆய்வை மேற்கொண்ட பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் விடுவது குறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாட்டு மக்கள் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்!