தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் 'பூவுலகின் நண்பர்கள்' - Tamil Nadu Climate Change Management Committee

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான "தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு"வில் 'பூவுலகின் நண்பர்கள்' குழுவை இடம்பெற செய்ததற்கு முதலமைச்சருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 23, 2022, 8:06 AM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள "தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் (Tamil Nadu Governing Council on Climate Change)” பூவுலகின் நண்பர்கள் இடம்பெற வாய்ப்பளித்தற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு நேற்று (அக்.22) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்திற்கான தகவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும், பாதிப்புகளை கணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல் திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழுவில் பல்வேறு முக்கியத்துறைகளின் அனுபவிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் இடம் பெற்றுள்ளார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைத் தொடங்கிய அமரர் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்த மிக முக்கியப் பணி 'அறிவுத்தேடலும், அறிவுப்பகிரலும்' இந்த நோக்கத்தில் அவர் ஒருங்கிணைத்த குழு வெளிக்கொணர்ந்த, சூழல் சார்ந்த வெளியீடுகள் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் அறிவியக்க வரலாற்றில் மிக முக்கியத் தடம் பதித்தவை.

அதுவும் சூழல்பாதுகாப்பில் ஆழமான புரிதலற்ற மேட்டிமைச் சிந்தனைகள் மேலோங்கியிருந்த காலத்தில், சூழலியல் அரசியலை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவர்கள் முன்னெடுத்தப் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. மிகவும் தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைய பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல்களின் தாக்கம் இல்லாத சூழலியலாளர்களே தமிழ்நாட்டில் இல்லை என்று கூறலாம்.

காலத்தின் கட்டாயம் எங்கள் செயல்பாடுகளை இன்னும் பல தளங்களில் விரிவுபடுத்தி வேகம் பெறச் செய்திருக்கிறது. இயற்கையை அறிவதே அறிவியல். ஆனால், இதைப் பிற்போக்குவாதமாகப் பார்க்கும் பலர் இயற்கையை வெற்றி கொள்வதே அறிவியல் என்று நம்பி முன்னெடுக்கும் செயல்கள் எந்த அறிவியல் தொழில்நுட்பங்களாலும்கூட மீட்க முடியாத நாசங்களை இங்கு நிகழ்த்தியுள்ளன. இன்று, காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் பல்வேறு விதத்தில் நமக்குப் பெரும் நன்மைகளைத் தந்திருந்தாலும் அவற்றைக் கையில் வைத்திருப்போரின் நோக்கம் வெறும் இலாப வேட்கையாய் இருப்பதால் இப்புவி மீள்புதுப்பிக்க முடியாத அளவுக்குப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் நடத்துவது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும் ஆய்வறிக்கைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்ப்படுத்தி வழங்குவது, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே சூழல் குறித்தச் செய்திகளை பொதுவெளியில் முன்வைப்பது என பல்வேறு வடிவங்களில் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள' தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் குழுவில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த வாய்ப்பின் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள பல்வேறு நெருக்கடிகளை சமாளிப்பதற்கு நேரடியாக இன்னும் அதிகமாக எங்களால் பங்களிக்க முடியும் என்று நம்புகிறோம். இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு கொடுத்திருக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் சூழல் பிரச்சினைகளில் எந்த சமரசமுமின்றி சூழல் பாதுகாப்பில் சரியான திசை நோக்கி எங்களை வழிநடத்தும் என்று உறுதி கூறி எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலநிலை மாற்றம், இயற்கைச் சீரழிவுகளைத் தவிர்க்க புதிய பி.டெக் பட்டப்படிப்பு - சென்னை ஐஐடி தகவல்

ABOUT THE AUTHOR

...view details