தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் குவாரிகளை திறக்காமல், ஆறுகளைக் காப்பாற்றுங்கள் - பூவுலகின் நண்பர்கள் குழு கோரிக்கை - Enforcement and Monitoring Guidelines

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூடவும், புதிதாக மணல் குவாரிகள் திறக்கும் முடிவை கைவிடவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Poovulagin Nanbargal has requested Chief Minister Stalin to close the sand Quarry in Tamilnadu and abandon the decision to open new Quarry
கோப்புப்படம்

By

Published : May 9, 2023, 3:41 PM IST

சென்னை: தமிழகத்தில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதற்கும், ஆற்றில் மணல் எடுக்கும் முறையை இயந்திர முறைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ''தமிழ்நாட்டில் கட்டுமானத் துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 2022 ஜனவரி மாதமே புதிதாக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஆற்றின் வடிகால் பகுதிகளில் மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்தது.

அதன்படி 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. மேலும் சில புதிய ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, ஏற்கெனவே சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதி பெற்று செயல்படாமல் இருந்த குவாரிகளையும் திறப்பதற்கான வேலைகளும் கடந்த ஆண்டே துவக்கப்பட்டிருந்தது. அதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையை மனித சக்தியைப் பயன்படுத்தி மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்குப் (Manual Mining) பதிலாக, இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்கு மாற்றுமாறு சுற்றுச்சூழல் அனுமதியில் திருத்தம் கோரப்பட்டிருந்தது.

புதிய குவாரிகளையும், மணல் அள்ளும் முறையில் மாற்றம் செய்யப்பட்ட குவாரிகளையும் திறக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டத்தில் அரசு அனுமதியளித்துள்ளது. மணல் குவாரிகளை இயக்குவதற்கு Sustainable Sand Mining Manangement Guidelines –2016, Enforcement and Monitoring Guidelines for Sand Mining-2020 உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

மேலும் 2016ம் ஆண்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியான பின்னரும் கூட தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த குவாரிகளில் பல்வேறு விதிமீறல்களும், மணல் திருட்டும் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் நீதிமன்றங்களிலும், பசுமைத் தீர்ப்பாயங்களிலும் மணல் திருட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மணல் அள்ளுவதற்கான விதிகளைத் தவறாது பின்பற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த உத்தரவுகள் பலவற்றிலும் மணல் அள்ளுவதில் Manual Mining முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாமல் கருத்தில் கொள்ளாமல் இயந்திர முறையில் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தொடங்கியிருப்பது ஆறுகளின் அழிவிற்கு வித்திடும் எனத் தெரிவித்துள்ளது.

கட்டுமானத் துறையில் நிலவும் மணல் பற்றாக்குறையைப் போக்கவும் மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களான ஆற்று மணல், பாறைகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதைத் தடுத்தாலே பெருமளவில் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் 2022 ஏப்ரல் 26ம் தேதி “Sand and Sustainability: 10 strategic recommendations to avert a crisis” என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு அரசும் மணலை கட்டுமானத்திற்குப் பயன்படும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் அதன் சூழல் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் சேர்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாகப் பார்க்க வேண்டும். மணலுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் திறப்பதைக் கைவிட வேண்டும் எனவும், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவாரிகளையும் மூடி தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம்'' என பூவுலகின் நண்பர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: Khargone Bus Accident: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி; 25 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details