திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பூந்தமல்லி மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், திருவேற்காடு பெருமாளாகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், மண்டபத்தின் சுவர் இடிந்து அங்கு தேங்கியிருந்த மழைநீர், அருகே உள்ள ராணி அண்ணாநகர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
திருவேற்காட்டில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - thiruverkaadu
திருவள்ளூர்: திருவேற்காடு நகராட்சியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நீரில் மூழ்கின. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் தங்க இடமின்றி, மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவேற்காடு 6வது வார்டில் மழை காலங்களில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்து பல்வேறு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இதுகுறித்து பலமுறை திருவேற்காடு நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.