சென்னை:இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக அறியப்படுபவர் மணிரத்னம். காதல் தொடர்பான படங்களை எடுப்பதில் வல்லவர். இவர் இயக்கிய நாயகன், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. இந்நிலையில் கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களின் ரசனையை கெடுக்காமல், சிறப்பாக படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவை த்ரிஷா, நந்தினி ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலன் விக்ரம் என எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ரகுமான் இசை படத்துக்கு பெரும் பலமாக இருந்தது. முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.500 கோடி வரை வசூலித்து பிரமாண்ட சாதனை படைத்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு தொழில்நுட்பத்திலும் வெளியிடப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கமல்ஹாசன் மிகவும் ஆர்வமாக இருந்தார். அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போனது. இதனால் முதல் பாகத்தில் தொடக்க காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். அது அனைவராலும் ரசிக்கப்பட்டது. அவரது கம்பீரக்குரல் படம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது எனலாம்.
இதையடுத்து இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசனின் பின்னணி குரல் இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் முன்கதையை கமல்ஹாசன் விவரிப்பது போல் அந்த வீடியோ உள்ளது. சோழ பேரரசில் ஏற்பட்டுள்ள குழப்பம், பதவி வெறி, எதிரிகளின் சூழ்ச்சி, நந்தினியின் கோபம் என சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் இரண்டாம் பாகத்தில் வருவதை கமல்ஹாசனின் குரல் விவரிக்கிறது. இது இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Tamilarasan: தடைகளை தாண்டி வெளியானது விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'