சென்னை: அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை முயற்சித்தும் முடியாமல் போனது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் இயக்கிய படம் பொன்னியின் செல்வன்.
லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் ரூ.500 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் பாகம் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு அதுவும் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. அண்மையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் வரும் 21ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.