சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிறகு அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் கை கூப்பி நின்றிருக்கும் புகைப்படமும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஸ்டாலின் நின்றிருக்கும் புகைப்படமும் தான் இவை.
நாஞ்சில் கோலப்பனுடன் பேசிய பொன்னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசியிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
கோகுல இந்திரா ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி தவறான வார்த்தைகளால் பேசுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக எப்படி ஓ.பன்னீர்செல்வத்தை அவர் அணுகினார் என்பது எனக்குத் தெரியும். கே.பி.முனுசாமி நக்ஸலைட் ஆக இருந்ததால் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்ததாக பொன்னையன் கூறியிருக்கிறார். அதிமுக பொதுக்குழுவில் சாதி வெறி அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிந்தது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் சென்றபோது எடப்பாடி பழனிசாமி சார்ந்த ஏழு மாவட்டச் செயலாளர்களின் அடியாட்கள் எங்களைத் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பல கொலைகள் நிகழ்ந்திருக்கும். முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், போன்ற எல்லா இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஒரே அதிமுக உறுப்பினராக ரவீந்திரநாத் உள்ளார். ரவீந்திரநாத் முதலமைச்சரை பார்த்தது தவறு என்றால் நீங்களும் தான் முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்பொழுது ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு லட்சம் பேரும் ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி வர வேண்டும். அதிமுக சாதி கொள்கையில் போவதை விரும்பாமல் பொன்னையன் உண்மையைப் பேசியுள்ளார்.
திமுக நினைத்திருந்தால் இந்த பொதுக்குழு நடந்திருக்காது. ஏனென்றால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா தொற்று காரணமாக 50 பேருக்கு மேல் கூட்டம் கூட அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை. அப்படி உத்தரவு பிறப்பித்திருந்தால் பொதுக்குழு நடந்திருக்காது.
ஈபிஎஸ் தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்ல நாங்கள் யாரை கேட்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை வகிக்க யாருக்கும் தகுதியில்லை. மீண்டும் ஒன்றரை கோடி தொண்டர்களோடு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக திரும்பும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை ரத்து செய்யக்கோரிய வழக்கு: இன்று விசாரணை!