சென்னை:கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், அமைச்சர் பொன்முடி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1 கோடியே 75 லட்சம் அளவுக்குச் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியது மட்டுமல்லாமல், இருவரையும் விடுவித்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இதனை அடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016ஆம் ஆண்டு மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 19 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், டிசம்பர் 21ஆம் தேதியான இன்று, பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அப்போது தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த நிலையில், இன்று (டிச.19) காலை 10 மணியளவில் நீதிமன்றத்திற்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி பதவிவகித்து வந்த உயர் கல்வித்துறையினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடிதத்தின் மூலம் தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்றுப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பனுக்கு அதிகாரப்பூர்வமாக உயர் கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக ஆளுநர் ரவியும் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
குறிப்பாகத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்திருந்த நிலையில் தற்போது, அவருக்கு உயர் கல்வித்துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பழிவாங்கும் என்னத்தோடு பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம் - என்.ஆர். இளங்கோ..