தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Ponmudi: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை - Ponmudi land grabbing case

1996ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது தொடுக்கப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட 7 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 6, 2023, 10:55 AM IST

Updated : Jul 6, 2023, 11:33 AM IST

சென்னை:கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக தலைமையிலான ஆட்சியில், பொன்முடி அமைச்சராக இருந்தார். அப்போது, அரசுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2003ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

அதேநேரம், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அமைச்சர் பொன்முடி தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இது தொடர்பாக, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி, அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் பொன்முடி மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 2007இல் உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்னர், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இதனையடுத்து, பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.

இதனால், பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கினார். அப்போது, அரசு தரப்பில் குற்றச்சாட்டுக்களை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என தெரிவித்து 7 பேரையும் விடுதலை செய்து அவர் உத்தரவிட்டார்.

இதன்படி, அமைச்சர் பொன்முடி, தற்போதைய சென்னை துணை மேயர் மகேஷ்குமார், கென்னடி, சந்திரசேகரன், காண்டப்பன், ஸ்ரீகாந்த் மற்றும் ஜோதி ஆகிய 7 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:Senthil balaji: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

Last Updated : Jul 6, 2023, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details