சென்னை:சென்னையில் கடந்த 2-ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியாவைப் போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் பாஜக நேரடியாகவும், திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள திரிணாமுல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உதயநிதியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று மறைமுகமாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாமியாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது. அதோடு அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவார காலத்திற்கு பிறகு இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.