சென்னை:பண்டிகை காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் மக்கள் நாளை (செப்.13) முதல் முன்பதிவு செய்யத் துவங்கலாம் என்றும், கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படும் நிலையைத் தவிர்ப்பதற்காகவே 120 நாட்களுக்கு முன்னர் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படுவதாகவும், பொதுமக்கள் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி வருகின்றது. அதற்கு முன்னதாக மக்கள் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி 11-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான ரயில் டிக்கெட்டுகளை நாளை (செப்.13) முன்பதிவு செய்ய துவங்கலாம்.
ஜனவரி 12ஆம் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் வருகின்ற செப்.14-ஆம் தேதி அதற்கான ரயில் டிக்கெட்டுகளையும், ஜனவரி 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.15-ஆம் தேதியும், ஜனவரி 14-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.16-ஆம் தேதியும், ஜனவரி 15-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.17-ஆம் தேதியும், ஜனவரி 16-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.18-ஆம் தேதியும், ஜனவரி 17-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள செப்.19-ஆம் தேதியும் முன்பதிவு துவங்குகிறது.