சென்னை: கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று (ஜன.3) ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கவுள்ள அரிசி மற்றும் சர்க்கரையின் தரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 19 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. வரும் 9ஆம் தேதி முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு அனைத்து மாவட்டங்களிலும் 60% பொருட்கள் சென்றுள்ளது என்றும் இரண்டு நாட்களில் 100% பொருட்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சேர்க்கப்படும். கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது. அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருக்கும்.