விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவந்த "கோமுட்டிகுளம்" என்ற குளத்தை கட்டட கழிவுகளைப் போட்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை, குளத்தை மாயமாக்கிவிட்டதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளதாகவும், குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும், குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர், அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு புகார் மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.