சென்னை: அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (அக்.05) காலை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் 66 பேர், மாநில நிர்வாகிகள் 65 பேர், மாநில அணி பிரிவு 38 பேர், மாவட்ட பார்வையாளர்கள் 41 பேர் என மொத்தம் 221 பேர் வரை பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும், கடமை நமக்கு உள்ளது ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் போது மத்திய அரசுத் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும். அடுத்த 7 மாத காலம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும், பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள்.
ஒவ்வொரு சட்டப்பேரவையில் உள்ள முக்கியஸ்தர்கள், அதாவது கீ ஓட்டர்ஸ் பட்டியலை தயாரிக்க உத்தரவு அரசு நடத்தும் கிராமசபை கூட்டம் போல பாஜக சார்பில் வரும் 15ஆம் தேதி ஒவ்வொரு கிளைகள் தோரும் ‘கூடுவோம் கூட்டுவோம்’ எனும் கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்னைகளை கையில் எடுப்போம். கூட்டணி முடிவை டெல்லி தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன் இனி முடிவு தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும்” என்றார்.
பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும் 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விடயம் இல்லை. இது கட்சித் தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டியது.
மிகப்பெரிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கிருந்து அனுப்பி வைப்போம், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி, 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும். 2024 தேர்தலில் வெற்றி பெறுபவர்களையும் வாக்கு விழுக்காட்டையும் பார்க்கலாம்.
கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லை என்றாலும் வருத்தப்படப்போவது இல்லை. என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவது தான். 2024 தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி, மற்ற கட்சிகளுக்கு சக்தி இல்லை. அந்தந்த கட்சிகள் அந்தந்த கட்சியின் வளர்ச்சியை தான் பார்க்கும். பாரதிய ஜனதா கட்சி, அதன் வளர்ச்சியை பார்க்கும் கூட்டணியில் யார் இருந்தாலும் போனாலும் வருத்தப்படப் போவதில்லை” என தெரிவித்தார்.