தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலைக் கடத்தல் வழக்கு: பொன் மாணிக்கவேல் பரபரப்புக் குற்றச்சாட்டு - contempt of court

சென்னை:  தமிழ்நாடு தலைமைச் செயலர், உள் துறைச் செயலர் ஆகியோருக்கு எதிராக பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் டிஜிபியும் அமைச்சர் ஒருவரும், வழக்கு விசாரணையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு  தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக பொன் மணிக்கவேல் வழக்கு

By

Published : Jun 11, 2019, 9:13 AM IST

Updated : Jun 11, 2019, 9:36 AM IST

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு ஜூலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேலை நியமித்து, அவருக்குத் தேவையான காவலர்கள், உட்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

பின்னர் சிலைக் கடத்தல் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு அந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்த நிலையில், 2018 நவம்பர் 30ஆம் தேதி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு செய்து தரவில்லையென பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள் துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்காக மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில், உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், எஸ்.பி. பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தன் கீழ் பணியாற்றுபவர்களை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அமைச்சரும், டிஜிபியும் விசாரணையில் தலையிடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியதுடன், குறிப்பிட்ட நான்கு வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுகிறார். இந்த வழக்குகளில் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பல மாவட்டங்களின் வழக்குகள் மாற்றப்படவில்லை. இதுதொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதில், 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதை மனுவில் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர மூன்று லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகள் செய்ய வேண்டிய நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குக்கான வசதிகள் செய்து கொடுக்கவில்லை. தற்போதைய குழுவில் 21 பெண் காவலர்கள் பணியில் இருந்தும், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யாததால் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமிற்கான அலுவலகத்திற்கு துப்புரவு பணிக்குக்கூட நிதி ஒதுக்குவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். சிறப்புப் பிரிவுக்குத் தேவைப்படும் எட்டு ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள், அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தொடர்ந்து அவமதிப்பில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஜி.யாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பேற்றது முதல், தான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை அரசு அலுவலர்கள் நிறைவேற்றாமல் தொடர்ந்து அவமதித்து வருவதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Last Updated : Jun 11, 2019, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details