சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை (ஏப்ரல் 21) வரை நடைபெறுகிறது. நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறையில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க அரசு முன் வருமா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் கேரள எல்லை வரை விரிந்துள்ள வால்பாறை தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, 100 கி.மீ பயணித்துச் செல்ல வேண்டி உள்ளதால் ஏழை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குழந்தைகள் படிப்பதற்கு பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்று கேட்டார்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ”கடந்த திமுக ஆட்சியில் 2006இல் வால்பாறை தொகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனாலும் அங்கும் மாணவர் சேர்க்கை இல்லாமல் பல இடங்கள் காலியாக உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளைப் பொறுத்த வரை கடந்த 2010-11இல் அப்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,16,687 பேர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தனர்.