சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள், இந்தாண்டு முதல்முறையாக 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர்க்கப்படவுள்ளனர். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு முடிந்தபின்னர், ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் காலி இடங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.
அந்தக் காலி இடங்களில் அண்ணா பல்கலைக்கழத்தினை தவிர, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டில், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் பிஇ, பிடெக் படிப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சேர்க்காமல் அந்த இடங்கள் 4 ஆண்டுகளும் காலியாகவே வைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் 2014-15ஆம் ஆண்டில் 324 இடங்கள், 2015-16ஆம் கல்வியாண்டில் 290 இடங்கள், 2016-17ஆம் கல்வியாண்டில் 294 இடங்கள், 2017-18ஆம் கல்வியாண்டில் 284 இடங்கள், 2018-19ஆம் கல்வியாண்டில் 175 இடங்கள், 2019-2020ஆம் கல்வியாண்டில் 389 இடங்கள், 2020-2021ஆம் கல்வியாண்டில் 570 இடங்கள் காலியாக இருந்தன.
2021-22 நடப்பு கல்வியாண்டில் 421 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் காலி இடங்களை நிரப்பும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் 2ஆம் ஆண்டில் இந்த ஆண்டு முதல்முறையாக நேரடியாக சேர்க்கப்படவுள்ளனர்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழகத்துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.