சென்னை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். அதன்படி, வருகிற 18ஆம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள். இதற்கான விற்பனையும் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மேலும், சிலை வைத்து, ஒரு வாரத்திற்கு பிறகு அதாவது (3,5,7,9) ஆகிய நாள்கள் கழித்து சிலையை சென்னை மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் சிலையை கரைப்பார்கள். இதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
வழிமுறைகள் என்னென்ன:களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.