தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் பணிகளைத் தொடங்கும் உற்பத்தி நிறுவனங்கள்: அறிவுறுத்தும் மாசு கட்டுப்பாடு வாரியம்

சென்னை: நீண்ட நாள்களுக்குப் பிறகு பணிகளைத் தொடங்கும் உற்பத்தி நிறுவனங்களை, பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தொழிற்கூடம்
தொழிற்கூடம்

By

Published : May 8, 2020, 10:35 AM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்து மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதன் அடிப்படையில், சுமார் 40 நாள்களாக மூடப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களும் தற்போது மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு பணிகளைத் தொடங்கும் இந்நிறுவனங்களை, முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”நிறுவனங்கள் செயல்பாட்டைத் தொடங்கும் முன்பு மாசுக் கட்டுப்பாடுக் கருவிகள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இயந்திரங்களை மீண்டும் இயக்கும்போது, மூத்த அலுவலர்களை உடன் வைத்துக்கொண்டு, திறன் வாய்ந்த பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும்.

அபாயகரமான விஷ வாயுக்கள் வெளியேறாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியை மனிதர்களைக் கொண்டு சுத்திகரிக்கக் கூடாது. இயந்திரங்களைக் கொண்டுதான் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்தகைய அபாயகரமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தகுந்த தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும், ஆலை சுத்திகரிப்பு குறித்த தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :மாவட்டம் தாண்டிச் சென்று மதுபானம் வாங்கிய 9 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details