சென்னை: பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசின் அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள், தங்கள் பெயரும் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் புகார் அளிக்க தயங்குகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
அரசாணையில் பெயர்களை இடம்பெற செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும்." என வலியுறுத்தியிருந்தார்.