சென்னை:முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார். அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதிமுக கொடியை ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து, அதிமுகவினருக்கு இனிப்பு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின்போது, அதிமுக கொள்கைப் பரப்பு துணை செயலாளர் கலை புனிதன் எழுதிய மக்கள் திலகம் எம்ஜிஆரின் மாண்புகள் என்ற புத்தகத்தை, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போல திமுகவின் அமைச்சர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்.
ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49% இருந்து 68% ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி, தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து, கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்" எனப் பதிவிட்டிருந்தார்.
அதேபோல ஓ.பன்னீர்செல்வம், தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டாஸ்மாக் விற்பனை 800 கோடி ரூபாய்க்கு மேல் என தகவல்