தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Udhayanidhi Stalin:அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமுகர்கள் வாழ்த்து!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

By

Published : Dec 14, 2022, 11:32 AM IST

Updated : Dec 14, 2022, 1:01 PM IST

சென்னை: தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் 34 இருந்த தமிழக அமைச்சரவை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், செந்தாமரை, கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு TN 02 CH 0001 என்ற எண் கொண்ட கார் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில்,”எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

எம்.பி.கனிமொழி,”இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கும், கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,”தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி ஏற்கும் திமுக இளைஞர் அணியின் மாநில செயலாளர் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

ஆ.ராசா,”மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் மற்றும் திராவிட தத்துவத்தை, கட்சியிலும் - ஆட்சியிலும் உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் செல்வார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு திராவிட இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் நமது தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் மற்றும் திராவிட தத்துவத்தை கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வார்” என பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”தன்தகுதியை உழைப்பால் தலை நிமிர்த்தியவர். தன்தொகுதி மக்களின் தடுப்பூசி பற்றிய தயக்கம் போக்கி கொரோனாவிடமிருந்து காத்து பொறுப்பை உணர்த்தியவர். 234 தொகுதிகளிலும் பாசறைக் கூட்டங்கள் நடத்தி கொள்கைப் பிடிப்பால் கோட்டையில் பூத்தவர்.... நம் உதயநிதி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...” என பதிவிட்டுள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,”உதயத்தை வரவேற்போம்!!” என பதிவிட்டுள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,”திராவிட மாடல் முதல்வரின் அமைச்சரவையை அலங்கரிக்கும் மாண்புமிகு சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் !! வாழ்க! வெல்க!” என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்,”வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்,”தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து,”உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான்

இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக

அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்”என வாழ்த்தி கவிதை பதிவிட்டுள்ளார்.

மேலும் பல அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மாமன்னன் தான் கடைசி படம்: அமைச்சர் உதயநிதி

Last Updated : Dec 14, 2022, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details