தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்துவிட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் நிலை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. இந்த இரு வழக்குகளும், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன், சுங்கக்கட்டண வசூல் விதிகளின்படி, சுங்கச்சாவடி அமைக்க ஏற்பட்ட மூலதனச் செலவு முழுவதும் வசூலிக்கும் வரை சாலையைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் கட்சிக் கொடிகளுடன் வரும் வாகனங்களுக்கும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்காமல் செல்ல அனுமதிப்பதால்தான் சுங்கச்சாவடி அமைக்க ஏற்பட்ட மூலதனச் செலவை வசூலிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.