சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தெரிய வந்தது. இந்த செயல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, வெள்ளனுர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர், இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 221 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து, பத்து நபர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் சூழலில் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது. இத்தனை ஆண்டுகள் முதலமைச்சர் போட்டு வைத்திருந்த சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே திமுக பார்க்கிறது என்பது வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக ஜாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்திற்கு நேராகவே சிரிக்கிறார்கள்.