சென்னை:நாளை 2024 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதனைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும், உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. “எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024ஆம் ஆண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் தமிழகத்தின் இரு முனைகளையும் சிதைத்திருக்கிறது. அவற்றிலிருந்து மீள்வதே புதிய ஆண்டின் சவாலாக இருக்கும்.
நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும், பொருளாதாரம் வளரும், மகிழ்ச்சி பெருகும், அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் ஆகியவை அறவே நீங்கி, வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை உருவாகும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு திகழட்டும்.
அகம்பாவம், ஆணவம், துரோகம், கொடூரச் சிந்தனை, நாகரிகமற்ற பேச்சு போன்றவை அகன்று, ஒழுக்கம் என்னும் மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களான அன்பு, அமைதி, எளிமை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவை வளரும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு மலரட்டும். வலிமையான பாரதம், வளமான தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.