தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - தலைவர்கள் வரவேற்பு! - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 18, 2023, 4:21 PM IST

ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய போட்டிகளில், கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அப்போட்டிகளை நடத்த தடைகோரியும், உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கின ஆர்வல அமைப்புகள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் இதுதொடர்பாக நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்ததது. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என ஒருமனதாக தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் செல்லும் எனவும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்துமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில், “ஜல்லிக்கட்டுத் தொடர்பாக, ’தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வைகோ

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலைகூறுகையில்: ”2014ஆம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தது. பின்னர், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு அவசர சட்டத்தை இயற்றுமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மே மாதம்,

கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று திமுகவுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழ்நாடு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது பிரதமர் மோடி மட்டும் தான்” என்றார்.

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறுகையில், “ஜல்லிக்கட்டுப் போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதைக் கடந்து தமிழ்நாட்டு உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பு என்பது நூற்றாண்டுகளைக் கடந்தது என்ற நிலையில் அது குறித்து ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் சரியான அமைப்பு இல்லை என்றும் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் பண்பாட்டு சிறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வரலாற்று சிறப்புமிக்க இன்னொரு அம்சம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் போன்ற பொதுப் பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் அதிகாரம் உண்டு என்பதாகும். இதன் மூலம் மத்திய பட்டியலில் உள்ள பொருட்கள் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எவ்வாறு அதிகாரம் உண்டோ அதேபோல் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றவும் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற அடிப்படையில் தான் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது.

அதேபோல் நுழைவுத் தேர்வுகளிலிருந்து தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் தொழில் படிப்பு கல்வி நிறுவனங்களுக்கு காலம்காலமாக விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைப் பாதுகாக்கும் நோக்குடன் தான் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டது என்பதால் அதற்கு குடியரசு தலைவர் வழியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details