மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழி போர் தியாகி தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகர், திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேப் போல் விருகம்பாக்கத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமையிலான நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’மொழிப்போர் தியாகிகளின் தியாகம் வீண் போகக்கூடாது. முன்பை விட 100 மடங்கு வேகத்தில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி மொழி பேசுபவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் தேவை எனும் மம்தாவின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாளை விவசாயிகளோடு நாங்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ’இன்றும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மயமாதல் தொடர்கிறது. பாராளுமன்ற மேலவையில் 70 விழுக்காடு அனைத்து கோப்புகளும் இந்தியில் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கும் அறிக்கைகள் கூட இந்தியில்தான் உள்ளது. மறைமுகமாகவும், நேர்முகமாகவும் இன்னும் பல்வேறு தளங்களில் வழியாகவும் இந்தி திணிப்பு நடைபெற்று வருகிறது.
இந்து ராஷ்டிரம் எனும் செயல்திட்ட அடிப்படையில் மோடி கும்பல் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கை கைவிட வேண்டும்; இந்திய பன்முகத்தன்மையை ஜனநாயக சக்திகள் காப்பாற்ற வேண்டும். மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு ஈவு இரக்கம் இல்லாமல் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் எனப் பிடிவாதமாக உள்ளது.
நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைக்க நினைத்தால் உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற நேர்ந்தால் மத்திய அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இன்று மாலையே 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாளை போராட்டம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.