சென்னை:இந்திய இசை உலகில் இசைகுயிலாக வலம் வந்தவர் வாணி ஜெயராம் (78). இந்திய திரைத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (பிப். 4) சடலமாக மீட்கப்பட்டார். இவரது இறப்பை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் வாணி ஜெயராமிற்கு, 2023 குடியரசு தினத்தையொட்டி “பத்ம பூஷன்” விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் சிறுவயதிலேயே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி. பேருக்கேற்றார் போல் இசை உலகின் கலைவாணி தான்.
டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசைப் பயின்ற வாணி ஜெயராம், வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களை கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வளர்த்துக் கொண்டார். அதன்படி சாதித்தும் காட்டியவர் வாணி ஜெயராம். இசை மீது இவர் வைத்திருந்த தீரா காதல் இவரை இந்திய அளவில் புகழ்பெறச் செய்தது. இவரது வெற்றிக்கு கணவர் ஜெயராமின் பங்கு அளப்பறியது.
வாணி ஜெயராம் 1971-ம் வருடம் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.
இந்தியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஒடியா, பெங்காலி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது இனிமையான குரலினால், சுமார் 50 ஆண்டுகளாக இசை உலகில் வலம் வந்தார். 78 வயதை அடைந்த பின்னும், யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள ‘மலை’ திரைபடத்தில், இமான் இசையில் பாடல் பாடியுள்ளார். அதுவே அவரது கடைசி பாடலாக அமைந்தது ரசிகர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.