சென்னை:இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த விஞ்ஞானிக்கு அறிவியல் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசுமைப் புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தை உருவாக்கியவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், எப்போதும் நம் இதயங்களிலும், மனதிலும் வாழ்வார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கொண்டு பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வென்றவர் சுவாமிநாதன். 1989-1991 மற்றும் 1996-2000 ஆகிய ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் மாநிலத் திட்டக் குழுவிலும் இடம் பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அவரது இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:MS Swaminathan: இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!
இதே போல் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "உலக அளவில் பெருமை பெற்றவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவருமான இந்திய வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன், வயது முதிர்வால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர் M.S. சுவாமிநாதன். இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை உருவாக்கி பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய M.S. சுவாமிநாதன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் துறையினருக்கும், வேளாண் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎஸ் தேர்வில் வெற்றி முதல் வேளாண் புரட்சியின் தந்தை வரை.. எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!