சென்னை:சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஷர்மிளா ராஜசேகர் (34) குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் கோவாவில் இருந்து சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்கு உடமைகளுடன் சென்று உள்ளார்.
இதையடுத்து, கோவா விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், ஷர்மிளாவைப் பார்த்து இன்னொரு பெட்டியை எடுக்குமாறு இந்தியில் கூறியுள்ளார். இதற்கு சர்மிளா இந்தி தெரியாததால் எனக்கு புரியவில்லை, இந்தி தெரியாது என அவரிடம் கூறியுள்ளார்.
அப்போது அந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஷர்மிளாவை நோக்கி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு அவர் நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருவதாக கூறியுள்ளார். அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், “தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. அப்போது இந்தி தெரியணும், இந்தி தேசிய மொழி, நீங்கள் கண்டிப்பாக கத்துக்கணும்” என கூறியதாக கூறப்படுகிறது.
இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, இந்தி அலுவல் மொழிதான், தேசிய மொழி இல்லை என மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு தெரிவித்துள்ளார். அதற்கு நீங்கள் குகூள் பண்ணி பாருங்கள் என மிரட்டும் தொணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர் இந்தி தேசிய மொழிதான், அனைவரும் கத்துக்க வேண்டும் என மீண்டும் கூறியதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஷர்மிளா அங்கிருந்து அமைதியாக சென்று உள்ளார். மேலும், இந்த விவகாரத்தால் கடும் மன உளைச்சல் அடைந்த சர்மிளா, இது குறித்து கோவா விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அறைக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
அப்போது அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர், அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அப்படி நடந்து கொண்டது யார், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மொழியின் அடிப்படையில் தங்களை அவமானப்படுத்துவது அதிருப்தி அளிப்பதாகவும், கலாச்சார உணர்வு குறித்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சர்மிளா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்த நிலையில், கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணை மிரட்டிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.