சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகி சங்கரய்யாவின் 102வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், “பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் பொதுவாழ்விலும், பொதுவுடைமை லட்சியங்களைக் கடைபிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு” என தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். மேலும் சங்கரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை முதல் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், செளந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் பிரமுகர்களான மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திமுக சார்பில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்டோர் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்தி ஆசி பெற்றனர்.