தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி! - bangaru death

Bangaru Adikalar death: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் காலமான நிலையில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Political leader condolences for late Bangaru Adikalar
ஸ்ரீ பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 8:16 AM IST

சென்னை:மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பீடத்தின் ஆன்மிக குரு மற்றும் பக்தர்களால் ‘அம்மா’ என அழைக்கப்படும் பங்காரு அடிகளார், உடல்நலக்குறைவால் நேற்று (அக்.19) மாலை காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருவத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள பங்காரு அடிகளாரின் பக்தர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

பங்காரு அடிகளார் மரணத்திற்கு பல அரசியல் பிரமுகர்கள் தங்களது X தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது” என பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, மாரடைப்பால் காலமான பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, “ஆன்மிக குரு மற்றும் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவர் என்றென்றும் போற்றப்படுவார்” என பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மேலும், இன்று நடைபெறவுள்ள பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கு அரசு மரியாதை உடன் நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்” என குறிபிட்டுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அடிகளாரின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பு எனவும், அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்று திருப்பூரில் நடக்கவிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் பங்காரு அடிகளாரின் மரணத்தால் தேதி மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:ஆசிரியர் சுப்பிரமணி ஆன்மீக சேவகர் பங்காரு அடிகளார் ஆனது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details