சென்னை: தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிராஸ்ரூட் கவர்னன்ஸ் (IGG) மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து, தமிழ்நாட்டில் 'தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்' கிராம ஊராட்சி அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பதை ஆய்வு செய்தன.
இந்த ஆய்வு தொடர்பாக 'அடிப்படை நோக்கத்திலிருந்து திசை மாறுகிறதா நூறு நாள் வேலைத் திட்டம்?' என்ற அறிக்கையை ஐஜிஜி அமைப்பினர் இன்று(பிப்.21) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜிஜி அமைப்பினர், "தமிழ்நாட்டில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பஞ்சாயத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இத்திட்டத்தில் வேலை செய்யும் பணியாட்களுக்கும் இத்திட்டம் தொடர்பான விழிப்புணவு இல்லை.
சட்டப்படி, நூறு நாள் வேலைத் திட்டத்தில், கிராம ஊராட்சிகள், வேலை அட்டைதாரர்களுடன் கலந்துரையாடி பணிகளின் தொகுப்பை தேர்வு செய்து, அதற்கேற்ப ஒவ்வொரு பணிக்கும் தொழிலாளர் செலவு மதிப்பீடு (லேபர் பட்ஜெட்) தயாரிக்க வேண்டும். இவை இரண்டும் கிராம சபையில், மக்கள் முன் வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், நாங்கள் களத்தில் ஆய்வு செய்தபோது, கிராம ஊராட்சிகளுக்கான இந்த பணிகளின் தொகுப்பு மற்றும் லேபர் பட்ஜெட் ஆகியவை தயாரிக்கப்படாமல், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தோராயமாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என தெரியவந்தது. இதன் விளைவாகவே எந்த கிராம குடும்பங்களுக்கும் 100 நாள்களுக்கான வேலையை உறுதி செய்ய முடியவில்லை என அறிய முடிகிறது.