சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பை அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து 2022-23ஆம் நிதி ஆண்டில் 392.51 கோடியை எட்டி உள்ளது. 2023 மார்ச் மாதம் எழுத்து தேர்வு மற்றும் தொடர்புடைய விளையாட்டு செயல்திறன் மதிப்பீடு செய்யபட்டு 76 பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதற்காக 2022-23ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை திட்டத்தினை செயல்படுத்த அரசு 50.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் அமைய உள்ள உலக தரத்திலான விளையாட்டு நகரம், ஏற்ற நிலம் இறுதிசெயப்பட்டு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு இப்போது தொடங்கியுள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.