தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் - புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொருளாதார கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் எனவும் சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொருளாதார அறிஞர் எஸ்தர் டஃப்லோ தெரிவித்துள்ளார்.

Stalin
Stalin

By

Published : Jul 10, 2021, 10:31 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி இக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குக் காரணமான ‘திராவிட மாடல்’ வளர்ச்சி குறித்து பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடம் எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு கண்டு வரும் வளர்ச்சியை எதிர்காலத்தில் மேலும் உயர்த்திடவும், இந்த வளர்ச்சியின் பயன்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நமது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.

இதன்பின் பொருளாதார அறிஞர். எஸ்தர் டஃப்லோ பேசுகையில், “பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.

பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம்

அவரைத் தொடர்ந்து பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், “கரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், “உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் உயர்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திட வேண்டும்.

இத்தகைய வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக மின் வசதிகளை மேம்படுத்திட வேண்டும்” என்று கூறினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் ஜீன் டிரீஸ், “அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும். ஏழை எளியோர்க்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

அடுத்து முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் பேசுகையில், “அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்திட வேண்டும். வரி நிர்வாகம் சரியாக முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பொருளாதார வல்லுநர் குழு உணர்த்தும் செய்தி என்ன?

ABOUT THE AUTHOR

...view details