வழிப்பறி புகாரை விசாரிக்கச் சென்ற காவலரை கஞ்சா போதையில் துரத்திய இளைஞர்கள் சென்னை: காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் திருமாவளவன் (47). இவர் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்பகுதியில் நடைப்பெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்று வந்த போது, அவரை சாலையில் வழிமறித்த கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் மூன்று இளைஞர்கள், திருமாவளவனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
தன்னிடம் பணம் இல்லை என திருமாவளவன் கூறவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய அந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திருமாவளவனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியரை கைது செய்யக் கோரி சக மாணவர்கள் போராட்டம்
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முயன்று உள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும், அந்த மூன்று இளைஞர்களும் தங்கள் கைகளை தாங்களே பிளேடால் வெட்டி கொண்டு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் ஓடி வந்து உள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த கான்ஸ்டபிள் சரவணன் பயந்து ஓட்டம் பிடித்து உள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் பூவிருந்தவல்லி காவல்துறையினர் சிறிது நேரத்தில் அந்த மூன்று நபர்களையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சபரி, சந்தோஷ், சூர்யா என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சனை கொடுமை புகார் - எம்எல்ஏ விளக்கம் என்ன?
மேலும் அவர்கள் மூவரும் கொள்ளை வழக்கு ஒன்றில் மாங்காடு காவல் துறையினரால் தேடப்பட்டு வருவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் அந்த மூன்று நபர்களையும் மாங்காடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பிறகு அவர்களை கைது செய்த மாங்காடு போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி செய்த நபர்கள், போலீசிடம் இருந்து தப்புவதற்காக, கஞ்சா போதையில் தங்கள் கைகளை தாங்களே வெட்டி கொண்டு, போலீஸ் கான்ஸ்டபிளை விரட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் கான்ஸ்டபிளை மூன்று நபர்களும் வீரட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சேலத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை.. தகாத உறவு காரணமா?