சென்னை: தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபுக்கு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் தமிழ்நாடு, கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க, கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பி வரும் போது, குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர், அங்குள்ள கடைகளின் குப்பைகளிலிருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்து விட்டு, மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை தமிழ்நாடு எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர்.
இவற்றை தமிழ்நாட்டில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு, ஆள் நடமாட்டமில்லாத இடங்களில், கொட்டி செல்கின்றனர். இது சம்பந்தமாக தமிழ்நாடு கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் 2 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்து, ஒன்பது நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.