சென்னை:கரோனா காலகட்டத்தில் ஆன்லைனின் கேம் விளையாடுவது பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.
பலர் சேர்ந்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுபோன்று ஆன்லைன் விளையாட்டுப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளும்படி கேம் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு நபரும் தங்கள் கூகுள் ஐடியை வைத்தோ, ஃபேஸ்புக் ஐடியை வைத்து பதிவு செய்யவேண்டும்.
இதன் காரணமாக போலியாக ஆன்லைன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக கூறி லிங்குகளை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலமாக மோசடி கும்பல் அனுப்பிவருகிறது.
ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் விளையாட நினைக்கும் நபர்கள் இந்த போலியான லிங்குகளில் நுழையும் பொழுது அவர்கள் செல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மோசடி கும்பல் திருடி விடுகிறது.
குறிப்பாக, கூகுள் அக்கவுண்ட் களையும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் களையும் மோசடி கும்பல் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதும், தனிப்பட்ட தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதும் நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட வெப்சைட் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளுமாறும், பாதுகாப்பில்லாத வெப்சைட்டுகள் வழியாக எந்தவித ஆன்லைன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்கள் தனியாக ஒரு கூகுள் கணக்கை உருவாக்கி விளையாடுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாது உங்கள் கணக்கை யாரையும் உங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்த முயன்றால் தங்களின் அனுமதி இல்லாமல் சமூக வலைதள கணக்கில் நுழைய முடியாதபடி பாதுகாப்புக்கு உள்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறு உங்கள் கூகுள் கணக்குகள், தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கிரேன் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு