தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2021, 7:59 PM IST

ETV Bharat / state

ஐந்து ஆண்டுகளில் 175 வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை - பார் கவுன்சில்

தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்கவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவும் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் வலியுறுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

bar council action
bar council action

சென்னை: தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், கடந்த 5 ஆண்டுகளில் 175 வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் தமிழக அரசு இணைந்து ஜூன் 28ம் தேதி, வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பார் கவுன்சில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

20 ஆயிரம் பேர் இந்த முகாம் மூலம் பயன்பெறுவர் என எதிர்பார்ப்பதாகவும், மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் இந்த தடுப்பூசி முகாம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கரோனா 1 மற்றும் 2ஆவது அலையில் மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், வழக்கறிஞர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 175 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் என யார் கூறினாலும் அவரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை கேட்க வேண்டுமென காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்கவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வரவும் பிரதமரை சந்தித்த முதலமைச்சர் வலியுறுத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னையில் இருந்த சட்டக்கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மீண்டும் சட்டக் கல்லூரி அமைக்க முதல்வரை வலியுறுத்துவதாகவும் அமல்ராஜ் குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details