சென்னை:கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ வேட்டை நடந்து வருகின்றன.
இந்தநிலையில் கடந்த 31 நாள்களில் காவல் துறையினர் நடத்திய வேட்டையில், 2ஆயிரம் 423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3.582 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல 6ஆயிரத்து 319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மூன்று கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக் கணக்குகளும், 6 நிலம், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் முடக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முக்கியமான ஏழு கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கிக் கணக்குகளும், நான்கு நிலம், வாகனம் உள்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அதேபோல், தேனி மாவட்டத்தில் 8 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆறு கஞ்சா கடத்தல் குற்றவாளிகளின் வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்களும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் கணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு 963 கிலோ, ரயில்வே காவல் படை 734 கிலோ, திருவள்ளூர் மாவட்டத்தில் 208 கிலோ, சென்னை மாநகரத்தில் 186 கிலோ. நாகை மாவட்டத்தில் 168 கிலோ, கோவை மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா மற்றும் இதர போதை பொருள்கள் கைபற்றப்பட்டது.
தடைசெய்யப்பட்ட குட்காவை பொருத்தவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 டன்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.6 டன்களும், வேலூர் மாவட்டத்தில் 3.2 டன்களும் அதிகபட்சமாக கைபற்றப்பட்டது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:‘ஸ்லைடிங் நம்பர் பிளேட்’ விற்பனையாளர்கள் இருவர் கைது