சென்னை: ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலத்தில் ராயல் என்ற இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஓட்டேரி காவல் நிலைய காவலர் விமல், ராயலை அழைத்து எச்சரித்துள்ளார். மேலும், இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சினை வாங்கிக் கொண்டு, காவல் நிலைய உதவி மையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராயல் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு, காவலர் விமலை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஏலச்சீட்டு மோசடி வழக்கு:திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சொப்னா என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு கொடுங்கையூரைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதியினரிடம் மாத தவணையில் சீட்டு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், ஏலச்சீட்டு முடிந்து தற்போது சொப்னா பணத்தை கேட்டபோது, சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதி பணம் தர மறுத்து உள்ளனர்.
இதனால், சொப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம், பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் கலைச்செல்வி தம்பதியினரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தம்பதி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது.